தென்னிந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசைக்கலைஞர் என்றால் அது இசைஞானி இளையராஜா தான். 1970ல் தொடங்கிய இந்த இசைச் சூறாவளி பல நாடுகளில் பலதரப் பட்ட மனிதர்களை இதன் இசையால் ஈர்த்துள்ளது. இவருடைய இசையில் மனம் கரையாதோர் எவரும் இலர். 1000 படங்களுக்கு மேல், 6500 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
ஒரு படத்தில் வரும் காட்சிகள் அதனுடைய தன்மையுடனேயே ரசிகர்களை சென்றடைவதில் இசைக்கு பெரும் பங்குண்டு. அந்த வகையில் இவர் கதையமைப்புக்கு ஏற்றவாறு இசையமைப்பதனால் ரசிகர்களுக்கு படத்தின் உணர்வுகளை சிறந்த முறையில் வெளிப்படுத்த முடிகிறது.
தொடர்ந்து இந்த காலத் தலைமுறையினருக்கும் இசையமைத்துவரும் இளையராஜா சமீபத்தில் விடுதலை படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அவர் இசையமைப்பில் உருவான உன்னோடு நடந்தா பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பாடலை பாடலாசிரியர் சுகா எழுதியிருந்தார். பாடலை கேட்ட ரசிகர்கள், இந்தப் பாடலின் மூலம் தான் ஒரு ஜீனியஸ் என்பதை இளையராஜா மீண்டும் நிரூபித்திருக்கிறார் என புகழ் மாலை சூட்டியிருக்கின்றனர்.
இதனிடையே மன்மதலீலை படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு நாக சைதன்யாவுடன் கைகோத்திருக்கிறார். தமிழ், தெலுங்கில் ஒரு நேரத்தில் வெளியாகும் இப்படத்திற்கு ‘கஸ்டடி’ என பெயரிடப்பட்டுள்ளது. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்திக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்துள்ளார் நடிகர் நாகசைதன்யா. இந்த சந்திப்பு குறித்து நாக சைதன்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “மேஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது எனது முகத்தில் மிகப்பெரிய ஆனந்தம். அவருடை இசை என்னுடைய வாழ்க்கை பயணத்தில் நிறைந்திருக்கிறது. அதிக முறை அவரது இசையை மனதில் வைத்து நடித்துள்ளேன். தற்போது என்னுடைய கஸ்டடி படத்திற்கு இசையமைத்துள்ளார். உண்மையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்” என பதிவிட்டுள்ளார்.
