நடிகர் அஜித்தின் தந்தை உயிரிழந்த நிலையில், நடிகர் சூர்யா தனது தம்பி கார்த்தியுடன் அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் கடந்த மார்ச் 24ஆம் தேதி மரணமடைந்தார். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் இறந்த அன்றைய தினமே சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. அஜித்தின் தந்தை மறைவு செய்தியை அறிந்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும், இரங்கல் தெரிவித்தனர். அதேபோன்று சினிமா பிரபலங்கள் பலரும் அஜித்தின் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய், இயக்குனர் பார்த்திபன் ஆகியோர் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று தனது தம்பி கார்த்தியுடன் அஜித் வீட்டிற்கு சென்றார். அஜித்தை சந்தித்த இருவரும் அவருக்கு தங்களது ஆறுதலை தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது அஜித்தின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர். சூர்யாவும், கார்த்தியும் ஒன்றாக காரில் அஜித் வீட்டிற்குள் சென்றபோது எடுத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அஜித்குமார் வீட்டில் நிகழ்ந்த சோக சம்பவத்திற்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா கலைஞர்கள் ஆறுதல் கூறி வருவது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
