பிரசாந்த் நடிப்பில் உருவான தமிழ் திரைப்படம் மூலம் இயக்குனராக, அறிமுகமானவர் ஹரி. தொடர்ந்து சாமி, கோவில், ஐயா, வேல் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார். இதில் விஷால் – ஹரி கூட்டணியில் உருவான தாமிரபரணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சிங்கம், வேங்கை, பூஜை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹரி, கடைசியாக அருண் விஜயுடன் இணைந்து யானை படத்தை எடுத்தார்.
இந்த நிலையில் இயக்குநர் ஹரி மற்றும் அவரது மனைவி ப்ரீதா ஹரி ஆகியோர் புதிய ‘குட்லக் ஸ்டூடியோஸ்’-ஐ தொடங்கியுள்ளனர். திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் திறம்பட செய்யும் புதிய குட்லக் ஸ்டூடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ளனர்.
இந்த விழாவில் நடிகர் சூர்யா, தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் எம்.அப்பாவு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர் பாபு, நடிகர் விஜயகுமார், ஶ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். புதிய ஸ்டூடியோவை தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு எம்.எல்.ஏ தலைமையில் நடிகர் சூர்யா ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்தார்.
முன்னணி நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கம் 40 வருட பாரம்பரியம் கொண்டது. இந்த திரையரங்கம் சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக, பல திரை ரசிகர்களின் வாழ்வில் நினைவலைகளின் சின்னமாக விளங்கிய இடமாகும்.
தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த திரு எம் ஜி ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் திரைப்படம் பார்த்து ரசித்த பெருமை இந்த குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கிற்கு உள்ளது. மிகவும் புகழ்மிகு அரங்கமாக இருந்த இந்த திரையரங்கம் தான் இப்பொழுது ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ எனும் பெயரில் சாலிகிராமத்தில் மீண்டும் உதயமாகிறது. இதனை முன்னணி இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவக்கியுள்ளனர்.
