தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து பெரிய நட்சத்திரங்களின் படங்களை தயாரித்து திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். அரசியல் பின் புலம் இருந்தாலும் தேர்ந்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து அதை தயாரிப்பதும் விநியோகிப்பதிலும் உதயநிதி ஸ்டாலின் சிறந்து விளங்குபவராய் இருக்கிறார்.
அதே நேரத்தில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகி ஹிட் கொடுத்தார். தொடர்ந்து பல தரப்பட்ட படங்களில் நடித்து மக்களுக்கு பிடிக்கும் படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்தார். கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘கலகத்தலைவன்’ திரைப்படமும் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படமும் வெளியாகி பாராட்டுகளை பெற்றது.
மேலும் வரும் 17 ம் தேதி ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது மக்கள் பணியில் முழு வீச்சுடன் செயல்படுவதால் திரைப்படங்களில் நடிப்பது இதுவே கடைசி என்று முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் தயாரிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து ‘வைகை புயல்’ வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய செல்வா ஆர் கே படத்தொகுப்பு செய்கிறார். இப்படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டதையடுத்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக நடிகர் வடிவேலு டப்பிங் பேசி வரும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதனிடையே மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு எம்எல்ஏ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதியின் தந்தையாக அவர் நடித்திருக்கும் காட்சிகள் நிச்சயம் படம் முடிந்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மாமன்னன் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
