விலங்கு வெப் சீரிஸ் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார் விமல். அந்த வெப் சீரிஸை பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த பிரசாத் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். மொத்தம் 7 எபிசோட்களாக உருவான விலங்கு வெப் சீரிஸ், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஜீ5 ஓடிடியில் வெளியானது. இதில் விமல், இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
த்ரில்லர் ஜானரில் ரூவாக்கப்பட்டிருந்த அந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் நடிகர் விமலின் சினிமா வாழ்க்கை மீண்டும் தொடங்கியது என்றே கூறலாம். மிகவும் சாதாரண பொருட்செலவில் ஆரம்பிக்கப்பட்ட விலங்கு இணையத் தொடர், இந்தியா முழுவதும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இதனால் விலங்கு இணையத் தொடரின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படுமா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் விமல் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருச்செந்தூர் கோயிலுக்கு தரிசனத்திற்காக குடும்பத்துடன் வந்துள்ளேன். ‘மா.பொ.சி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறேன். மைக்கேல் என்ற இயக்குநரிடம் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கிறேன். ‘கலகலப்பு’, ‘தேசிங்கு ராஜா’ வரிசையிலான காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன்.
அடுத்து ‘விலங்கு’ தொடரின் இரண்டாவது சீசன் ஆரம்பிக்க இருக்கிறது. இறைவன் அருளால் நல்ல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறேன். ‘விலங்கு’ இணையத் தொடருக்கு பிறகு ரசிகர்களுக்கு பிடித்த கன்டென்ட் உள்ள படங்களை தேடித் தேடி நடிக்கிறேன்.‘மா.பொ.சி’ 80-களில் நடக்கும் கதை.
அதற்கேற்ற காஸ்டியூமில், ஹேர்ஸ்டைலில் வித்தியாசமாக உருவாகும் இப்படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் என்று தெரிவித்தார்.விலங்கு இணையத் தொடரின் இரண்டாம் பாகமும் த்ரில்லர் ஜானரிலேயே உருவாக உள்ளதாகவும், இதற்கிடையே இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ், அல்லு அர்ஜூன் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
