நடிகை சமந்தா எப்போதுமே சர்வதேச அளவில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாகவே வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். தி பேமிலி மேன் 2 வெப் தொடரின்மூலம் சமந்தாவிற்கு மிகப்பெரிய ப்ரேக்கை கொடுத்திருந்த இயக்குநர்கள் டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார் சமந்தா.
இது மட்டுமில்லாமல் பாலிவுட்டில் மேலும் ஒருசில படங்களில் சமந்தா கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் அடுத்தடுத்து யசோதா மற்றும் சாகுந்தலம் படங்களில் நடித்து முடித்துள்ளார் சமந்தா. இதில் யசோதா படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் வசூலிலும் பட்டையை கிளப்பியது. இதையடுத்து சமந்தாவின் நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் படம் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்தப் படத்தை ஒப்புக் கொள்ள தான் மிகவும் பயப்பட்டதாகவும் ஆனால் அந்த பயமே இந்தப் படத்தை சேலஞ்சிங்காக எடுத்து நடிக்க காரணமாக அமைந்ததாகவும் தற்போது அந்த கேரக்டர் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் சமந்தா இந்தப் படத்தின் பிரமோஷனின்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்திற்காக தொடர்ந்து அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்துவரும் சமந்தா, தற்போது சேனல் ஒன்றிற்கு கொடுத்துள்ள பேட்டியில் தன்னுடைய விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். அப்போது பேசிய சமந்தா, நடிகர்களுக்கு அதிக சம்பளமும், திறமை, அழகு அதிகமாக கொண்டிருக்கும் நடிகைகளுக்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இந்திய அளவில் முன்னணியில் உள்ள நடிகர்களுக்கு 100 கோடிக்கும் மேல் அதிகமான சம்பளம் கொடுக்கப்படும் நிலையில், அதே திறமையும் அழகும் கொண்ட நடிகைகளுக்கு 3 முதல் 4 கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் வழங்கும் போக்கு காணப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள சமந்தா, திறமை, முந்தைய படங்களின் வெற்றித் தோல்விகளை கருத்தில் கொண்டே, தனக்கு சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் சம்பளத்தை அதிகரிக்க சொல்லி தான் கெஞ்ச மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
