சிம்பு, கெளதம் கூட்டணி மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பியது. கடந்த வருடம் வெளியான இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூலிலும் மாஸ் காட்டியது. இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப்படத்திற்கு முன்பாகவே ‘பத்து தல’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘முஃப்தி’ படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ கீரின் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த தாதா கெட்டப்பில் சிம்பு ‘பத்து தல’ படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஆரம்பத்தில் சிம்புவிற்கு குறைவான காட்சிகளே இருந்தது. ஆனால் படத்தின் மீது அவர் காட்டிய ஆர்வத்தால் அவரின் காட்சிகளை படக்குழுவினர் அதிகப்படுத்தினர்.
‘பத்து தல’ படத்தின் ரீமேக்கை ‘சில்லுன்னு ஒரு காதல்’ பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக சிலம்பரசனின் பஞ்ச் வசனங்கள் செம மாஸ் ஆக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் படத்திலிருந்து ராவடி என்னும் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா நடனமாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான நடிகர் ஆர்யா, நடிகை சாயீஷாவை 2019 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். கஜினிகாந்த் திரைப்படத்தில் இணைந்து நடித்த ஆர்யா-சாயீஷா இடையே காதல் மலர்ந்ததையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடனும் இவர்களது திருமணம் நடந்தது.
தற்போது இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு இருந்தார் சாயிஷா. இந்த நிலையில் தற்போது இவர் பத்து தல படத்தின் மூலம் அவர் திரையுலகிற்கு ரீ-விசிட் செய்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பத்து தல படத்தில் ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன், மனுஷ்யபுத்திரன், கலையரசன், டிஜே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
