பாகுபலி படம் வெளியாகி ஹிட்டான பிறகு பொன்னியின் செல்வனையும் திரைப்படமாக்க வேண்டும் என்ற பேச்சு அதிகளவு எழுந்தது. இதனை திரைப்படமாக்க எம்ஜிஆரும், கமல் ஹாசனும் ஆரம்பத்திலேயே முயற்சிகளை எடுத்தனர். எம்ஜிஆரோ இயக்குநர் மகேந்திரனை வைத்து திரைக்கதையையும் எழுத வைத்தார். ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. அதனையடுத்து கமல் ஹாசனும் முயல அவருக்கும் அது நிறைவேறாமலேயே போனது.
சில வருடங்களுக்கு முன்னரே பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக்குகிறார் எனவும் அதில் விஜய்யும், மகேஷ் பாபுவும் நடிப்பார்கள் என கூறப்பட்டது. ஆனால் அப்போது அது நிறைவேறவில்லை. இதனையடுத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரகாஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்தது.
நாவலில் மொத்தம் ஐந்து பகுதிகள் இருக்கும் சூழலில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியானது. படத்தின் முதல் பாகமானது கடந்த ஆண்டு வெளியாகி பிரமாண்ட ஹிட்டடித்தது. 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடக்கவிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தில் இடம்பெற்றிருக்கும் அக நக பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான அறிவிப்பை க்ளிம்ப்ஸுட்ன் நேற்று வெளியிட்டிருந்தது படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம்.
நேற்று அறிவித்தபடி அக நக பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் தமிழ் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழில் இந்தப் பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாட, இளங்கோ கிருஷ்ணன் பாடலை எழுதியிருக்கிறார். பாடல் ஏ.ஆர். ரஹ்மானின் பக்கா மெலோடியாக உருவாகியிருக்கிறது. தற்போது இந்தப் பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களை கவர்ந்துவருகிறது.
