ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் லால் சலாம். இப்படத்தை ரஜினியின் மகள் ஐஷ்வர்யா இயக்கினார். ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையை போற்றும் விதமாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.
பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியான இத்திரைப்படம் சுத்தமாக தியேட்டர்களில் எடுபடவில்லை. ரஜினி நடிக்கும் படம் என வியாபாரம் செய்த போதிலும் இத்திரைப்படத்திற்கு எந்த வித எதிர்பார்ப்பும் மக்களிடையே கிடையாது. ஒட்டுமொத்தமாக 30 கோடிக்கு அருகில் மட்டுமே வசூல் செய்து பெரிய தோல்விப் படமாக அமைந்துள்ளது.
லால் சலாம் படத்தைக் குறித்து இயக்குனர் மற்றும் ரஜினியின் மகளான ஐஷ்வர்யா அண்மையில் பேசியுள்ளார். அதில் விமர்சனங்களைப் பற்றியும் படத்தின் இந்த நிலைக்கு காரணம் குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “ லால் சலாம் படத்தின் கதை எழுதிய பிறகு மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரம் மொத்தமாகவே 10 நிமிடங்கள் தான் இருக்கும். அவரும் ஒரு சாதாரணமான கதாபாத்திரம் தான். ஆனால் அந்தக் கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் எனும் ஒருவர் வரும்போது எங்களால 10 நிமிடங்கள் மட்டும் வைக்க முடியவில்லை. ”
“ அதனால் அவரைச் சுற்றி படம் நகரும் படி ஆகிவிட்டது. அவ்வளவு புகழ் உடைய நடிகரைச் சுற்றி படம் நிகழ்வது தான் சரியானது கூட. உண்மையான ஸ்கிரிப்ட் படி மொய்தீன் பாய் இடைவேளைக்குப் பிறகு தான் வருவார். ரஜினிக்காக கமர்ஷியல் படத்துக்காக முதல் பாதியிலும் அவரை எடுத்து வர வேண்டிய நிலை உருவானது. ரீலீசுக்கு இரு தினங்கள் முன்னாள் நாங்கள் மொத்தமாக மீண்டும் எடிட் செய்தோம். ” என்றார் ஐஷ்வர்யா ரஜினிகாந்த்.
மேலும் இதன் காரணமாக 20 நிமிட கதைக்களம் கொண்ட முக்கிய காட்சிகளை வைக்க முடியாமல் போனது என்றார். மக்களின் விமர்சனங்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னார். லால் சலாம் படம் நல்ல கதையைக் கொண்டாலும் அதை சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை என்பது தான் அதன் தோல்விக்கு முக்கியக் காரணம். ரஜினி போன்ற மாஸ் ஹீரோ படத்தில் இருந்தால் அவருக்கு சமரசம் செய்யப் போய் படத்தின் கதைக்களம் அடி வாங்குவதை நாம் கண்டுள்ளோம்.