கடந்த 2019-ம் ஆண்டு ஜீன் பால் லால் இயக்கத்தில் பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் வெளியான படம் ‘ட்ரைவிங் லைசன்ஸ்’. மலையாளத்தில் வரவேற்பை பெற்ற இப்படத்தின் அதிகாரபூர்வ தழுவலை ஏற்று பாலிவுட்டில் உருவான படம் ‘செல்ஃபி’. ராஜ் மேத்தா இயக்கியுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். தவிர நுஷ்ரத் பருச்சா, டயானா பென்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் நேற்று முன்தினம் (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியானது.
மலையாளத்தில் டிரைவிங் லைசன்ஸ் வசூல் சாதனை படைத்த நிலையில், பாலிவுட்டிலும் அதன் ரீமேக் ஆன செல்பி திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் படம் ரிலீஸாகி மோசமான வசூலை ஈட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் வெளியான இப்படம் முதல் நாளில் இரண்டரை கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கின்றது.
படம் வெளியான 2 நாளில் நாடு முழுவதும் வெறும் ஆறு கோடி ரூபாய் மட்டுமே இந்தப் படம் வசூல் செய்துள்ளது. பாலிவுட் ரசிகர்களுக்கு சொந்தமாக வரும் படங்களை பார்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், தென்னிந்திய படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்களை ரீமேக் செய்து கொடுப்பது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தாலும், 40க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்கள் தென்னிந்திய படங்களின் ரீமேக்காக உருவாகி வருவது தான் காமெடியின் உச்சம்.
அதிலும் பாலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமாரின் படங்கள் சமீப காலமாகவே தொடர் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜிகர்தண்டா ரீமேக் இந்தியில் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. அவரது ‘பச்சன் பாண்டே’, ‘சாம்ராட் பிருத்விராஜ்’, ‘பெல்பாட்டம்’, ‘ரக்ஷா பந்தன்’, ‘கட்புட்லி’ உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்தன. இந்நிலையில் ‘செல்ஃபி’ படமாவது நல்ல வரவேற்பைப் பெரும் என்று எதிர்பார்த்த நிலையில் முதல் நாள் வசூல் படுமோசமாகவே இருந்திருக்கிறது. இதனால் அக்ஷய் குமார் கதைகளில் கவனம் செலுத்தி படங்களைச் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
