‘மௌனம் பேசியதே’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அமீர், அடுத்ததாக ராம், பருத்தி வீரன், ஆதி பகவான் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்திய அமீர் ‘யோகி’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அதனைத் தயாரித்தும் இருந்தார். பின்பு யுத்தம் செய், வட சென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்போது ‘உயிர் தமிழுக்கு’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். இதையடுத்து ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக கடந்த வருடம் அறிவித்திருந்தார். இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் என் போஸ்டர் வெளியானது.
அமீர் இயக்கும் அனைத்து படங்களிலும் யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைப்பாளராக பணியாற்றிய நிலையில் மீண்டும் ஒரு படத்திற்கு இருவரும் கைகோர்க்கவுள்ளனர். இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அமீரும் இணைந்து வெளியிட உள்ளனர். இதில் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத் தலைப்பு மற்றும் தொழில் நுட்பக் கலைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. யுவன் அமீர் கூட்டணியில் உருவான அனைத்து படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், தற்போது இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக வெளியாகி உள்ள அறிவிப்பு யுவன் சங்கர் ராஜா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
