Entertainment

நிஜமாதான் சொல்றாங்களா.. போஸ்டருக்கு குட்பாய் – பாடலை வெளியிட்டு பரவசப்படுத்திய அந்தகன் படக்குழு!

இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் அந்தாதுன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற முன்னணி நடிகர்கள் பலர் முயன்ற நிலையில், நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அந்த ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கியிருந்தார்.

Advertisement

பாலிவுட்டில் அந்தாதுன் பெயரில் வெளியான இந்த திரைப்படம் தமிழில் அந்தகன் எனும் பெயரில் உருவானது. ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரகனி, ப்ரியா ஆனந்த், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்குவதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால், படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் அந்தகன் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் அப்டேட் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், ஒவ்வொரு பண்டிகையின் போதும் தவறாமல் படத்தின் போஸ்டர்களை மட்டும் அந்தகன் திரைப்பட குழுவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

Advertisement

தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம் குடியரசு தினம், விநாயகர் சதுர்த்தி என அத்தனை விடுமுறை நாட்களிலும் சமூக வலைதளங்களை அந்தகன் திரைப்படத்தின் போஸ்டர் ஆக்கிரமிக்க அதை ட்ரோல் மெட்டீரியலாக கையில் எடுத்தனர் இணையதளவாசிகள். இப்படி மீம்ஸ் கிரியேட்டர்கள் அந்தகன் திரைப்படத்தை எவ்வளவு வறுத்தெடுத்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் போஸ்டரை மட்டுமே வெளியிடுவதில் குறியாய் இருந்த படக் குழுவினர், நீண்ட இடைவெளிக்கு பிறகு படத்தின் பாடலை வெளியிட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்த கண்ணிலே எனும் பாடலை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஆதிக் பாடியுள்ளார். உமாதேவி எழுதிய இந்த மெலடி பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தகன் திரைப்படம் மே மாதம் திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top