அருண் விஜய் 1995ம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி, துள்ளித் திரிந்த காலம் என்று தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார்.
ஆனால் அதற்கு பிறகு வெளியான அவருடைய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை அவருக்கு தர மறுத்தது. இருப்பினும் தன்னுடைய திரை பயணத்தை தொடர்ந்த அவருக்கு 2015ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் உடன் இணைந்து நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் ஒரு கம்பேக்காக அமைந்தது. தொடர்ந்து தடையறத் தாக்க, குற்றம் 23, தடம் ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை அருண் விஜய் பெற்றார்.
கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி கடந்த ஆண்டு ‘தலைவி’ படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய், நடிகர் அருண் விஜய்யுடன் கைகோத்தார்.
அச்சம் என்பது இல்லையே என பெயரிடப்பட்ட இந்த படம், பிறகு மிஷன் சாப்டர் ஒன் என மாற்றம் செய்யப்பட்டது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் நிமிஷா சஜயனும் நடித்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
டீசர் புதிய கதைக்களத்துடன் சுவாரஸ்யமாகவே தொடங்குகிறது. லண்டனில் உள்ள சிறையில் நடக்கும் இந்த கதையில் காவல்துறை அதிகாரியாக எமிஜாக்சன் இன்ட்ரோ ஆகிறார். அருண் விஜய்யின் இன்ட்ரோவும், எமி ஜாக்சன் ஃபைட் சீக்வன்ஸூம் கவனம் பெறுகிறது. வெறுமேனே ஆக்ஷன் படமாக மட்டுமல்லாமல், டீசரின் இறுதியில் வரும் சென்டிமென்ட் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. படம் விரைவில் திரைக்கு வரும் என தெரிகிறது.
