நடிகர் ஷாருக்கானின் பதான் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு சொந்த பிரச்சினைகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கானின் எந்தப்படமும் ரிலீசாகாத நிலையில், பதான் படம் வெளியாகி சிறப்பான வசூலையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. துவண்டிருந்த பாலிவுட் திரையுலகத்தை பதான் மீண்டும் தூக்கி நிறுத்தியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தப் படத்தை தொடர்ந்து ஷாருக்கானுடன் கை கோர்த்துள்ள இயக்குனர் அட்லி, ஜவான் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த சில வாரங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். மும்பையிலேயே தங்கி இந்தப் படத்தின் சூட்டிங்கில் அவர் பங்கேற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் இவரை மும்பை ஏர்போர்ட்டில் காணமுடிந்தது. படத்தில் யோகிபாபு உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துவரும் நிலையில், படத்திற்கு இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். இரட்டை வேடங்களில் ஷாருக்கான் கலக்கும் ஜவான் படம் ஜூன் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜவான் படத்தை முடித்த கையோடு இயக்குனர் அட்லி, நடிகர் விஜயுடன் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யை வைத்து தெறி மெர்சல் பிகில் ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்த அட்லி, விஜய்யுடன் நான்காவது முறையாக பணியாற்ற போவதாகவும், இது பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் லியோ படத்தில் பணியாற்றி வரும் நிலையில், இதன் பணிகள் மே மாதம் முடிய இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் விஜயின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கான நட்சத்திரங்கள் தேர்வில் அட்லி ஈடுபட்டிருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
