தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் “சி சு செல்லப்பா” எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார். இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய “அசுரன்” மற்றும் “விசாரணை” படங்களும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் “விடுதலை” படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே.
முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் “வாடிவாசல்” படத்தின் டைட்டில் லுக் கடந்த ஆண்டு வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் வடசென்னை 2 படத்தையும் வெற்றிமாறன் எப்போது எடுப்பார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றன. மீண்டும் இவரின் கூட்டணி குறித்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள நடிகர் தனுஷ், தன்னை ஏமாற்றாத ஒரே ஒரு நபர் வெற்றிமாறன் தான் எனக் கூறியுள்ளார். நான்கு பேர் மீது தான் அதிக நம்பிக்கை வைத்திருந்ததாகவும், ஆனால் அவர்களில் 3 பேர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தனுஷ் கூறியுள்ளார்.
சிலர் பெரிய வெற்றியை பார்த்த பிறகு தன்னை விட்டு விலகி விட்டதாகவும் ஆனால் வெற்றிமாறன் ஒருவரே எவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்தாலும் தன்னுடன் இருப்பதாகவும் தனுஷ் கூறியுள்ளார். தன்னை ஏமாற்றிய மூன்று பேர் எனக் கூறிய தனுஷ் அவர்களின் பெயரை குறிப்பிட மறுத்துவிட்டார்.
