நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமே தன்னுடைய எல்லைகளை குறுக்கிக் கொள்ளாமல், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது புதிய முயற்சியாக தெலுங்கிலும் சார் படத்தின் மூலம் அவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவரது அடுத்தடுத்த படங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து ரிலீசான வண்ணம் உள்ளது. தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் அதிகமான ரசிகர்களை கோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் வைத்துள்ளார் தனுஷ்.
அதனால்தான் இவரால் தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து நடிக்க முடிகிறது. இவரது நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான மாறன், திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக நித்யா மேனனுடன் ஜோடி சேர்ந்து தனுஷ் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் சிறப்பான வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து வாத்தி திரைப்படத்தையடுத்து, கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்த படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகே உள்ள காடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த காடுகளில் போர் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் போர் காட்சிகளின் படப்பிடிப்பை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்போது நீக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் யாரும் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போது ’கேப்டன் மில்லன்’ படத்தின் கிளைமாக்ஸ் போர் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
