யோகா டீச்சராக இருந்த அனுஷ்கா சூப்பர் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2005ஆம் ஆண்டு அறிமுகமான அனுஷ்கா தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவருக்கென்று ரசிகர் பட்டாளமும் உருவானது. பல படங்களில் நடித்தாலும் அவருக்கென்று ஒரு திருப்புமுனை வராமல் இருந்தது.
அந்த சமயத்தில்தான் வெளிவந்தது அருந்ததி. அந்தப் படத்தில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்த பலரும் வெகுவாக பாராட்டினர். மேலும் நிச்சயம் இன்னும் பல வருடங்களுக்கு முன்னணியில் இருப்பார் எனவும் ரசிகர்கள் முதல் திரையுலகினர் வரை பலர் கூறினர்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாதவன் நடித்த இரண்டு படம் மூலம் என்ட்ரி ஆனார். இதனையடுத்து விஜய்யுடன் அவர் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். அதன் பிறகு சூர்யாவுடன் சிங்கம் சீரிஸ், அஜித்துடன் என்னை அறிந்தால் விக்ரமுடன் தாண்டவம் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியானார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் முதல் பாகத்தில் பெரிதாக அனுஷ்காவுக்கு ஸ்கோப் இல்லையென்றாலும் இரண்டாவது பாகத்தில் அனுஷ்காவுக்கு பெரும் ஸ்பேஸ் கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்ட அவர் நடிப்பில் அசத்தினார். படமும் இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டானதால் அனுஷ்காவும் மிக பிரபலமானார்.
இதனையடுத்து ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதன் பிறகு அதனை குறைக்க முடியாமல் தடுமாறினார். இதனால் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இருப்பினும் அனுஷ்கா மீண்டும் எப்போது நடிக்க வருவார் என பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அவர் ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரொமான்ஸ் மற்றும் காமெடி திரைக்கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் அனுஷ்கா சமையல் கலை வல்லுனராக நடித்து வருகிறார்.
ராதான் இசையில் மகேஷ்பாபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த பாடல் வரும் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ’என்னடா நடக்குது’ என்று தொடங்கும் இந்த பாடல் தனுஷ் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.