தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி திரைப்படம் வெளியாகியிருந்தது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது. வாத்தி வெளியாகும் முன்பே கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் தனுஷ்.
இந்த படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தென்காசி அருகே உள்ள காடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. களக்காடு வனப்பகுதிகளில் போர் காட்சிகள் படமாக்கப்பட்டன. தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
ராக்கி, சாணி காகிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் தென்காசியில் உள்ள வனப்பகுதி மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் தாங்கல் மண்டலத்தில் நடைபெற்ற போது, பாதுகாப்பு மண்டலத்தில் சட்டவிரோதமாக செங்குளம் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைத்து, அதன் கரைகளை சேதப்படுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, படப்பிடிப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்தை அடுத்து, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின் முறையாக அனுமதி பெற்று கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தொடங்கியது.
தொடர்ந்து கடலூர் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், ஜூன் மாதம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. தொடர்ந்து ஜூலை மாதம் டீசரும் வெளியாகிறது. தீபாவளியன்று கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. சிவகார்த்திகேயனின் அயலான், கார்த்தியின் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா 2 ஆகிய படங்கள் தீபாவளி ரேசில் இருக்கும் நிலையில் இந்தப் படமும் அன்றைய தினமே ரிலீஸ் ஆகும் எனக் கூறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது புதிய தகவலாக அக்டோபர் மாதமே கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜயின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆயுத பூஜை விடுமுறையை எதிர்நோக்கி அன்றைய தினமே இந்த படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் விஜய் மற்றும் தனுஷ் படங்கள் வெளியாக இருப்பதால் கோலிவுட் வட்டாரத்தில் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.