பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்த படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள ‘பகாசூரன்’ படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார்.
‘பகாசூரன்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் கடந்த 17ம் தேதி வெளியானது. அதேபோல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஓய்வுபெற்ற ராணுவ மேஜரான ‘நட்டி’ நட்ராஜ் யூடியூப்பில் குற்ற வழக்கு வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் அவரது அண்ணன் மகள் தற்கொலை செய்து கொள்கிறாள். திருமணத்துக்கு வற்புறுத்தியது பிடிக்காமல் உயிரை மாய்த்ததாக போலீஸ் வழக்கை முடிக்கிறது. அந்த பெண்ணின் செல்போனை ஆராய்கிறார் நட்ராஜ்.
அப்போது காதலன் வற்புறுத்தலால் செல்போனில் நிர்வாண போஸ் கொடுப்பதும், அதுவே வினையாக மாறி அவளை பாலியல் தொழிலில் தள்ளி விடுவதும் தெரிய வருகிறது. பாலியல் தொழில் செய்யும் கும்பல் மிரட்டியதால் அவள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்கிறார். அந்த கும்பலை பிடித்து கூண்டில் ஏற்ற போலீசோடு களம் இறங்குகிறார். இன்னொரு புறம் தெருக்கூத்து கலைஞரான செல்வராகவன் சிவபக்தராக மாறி அடுத்தடுத்து குரூரமாக சில கொலைகளை செய்கிறார். அந்த கொலைகளின் பின்னணி காரணம் என்ன? பாலியல் கும்பலை நட்டி கண்டுபிடித்தாரா? என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது படம்.
இந்த நிலையில் இப்படத்திற்கு பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில், “பகாசூரன் திரைப்படம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதை கேட்க முடிகிறது. என்னுடைய நண்பர் நட்டி நட்ராஜ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
