வணங்கான் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கடலோர பகுதிகளில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. முதன்முறையாக கீர்த்தி ஷெட்டி தமிழ் சினிமாவில் இந்தப்படம் மூலம் கால் பதிப்பதாக இருந்தது. மேலும் இந்தப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக அதிரிபுதிரியான தகவல்கள் எல்லாம் வெளியாகி இணையத்தை கலக்கியது.
இதன் படப்பிடிப்பு நடந்த சமயத்திலே சூர்யா, பாலா இடையே சின்ன சின்ன உரசல்கள் ஏற்பட்டதாகவும், சூர்யா கோபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தே கோபமாக கிளம்பியதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை படக்குழுவினர் மறுத்தாலும் ஒருக்கட்டத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனையடுத்து திடீரென பாலா வெளியிட்ட அறிக்கையில், ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகுவதாக நாங்கள் இருவரும் கலந்து பேசி முடிவெடுத்தோம்.
நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் விரைவில் உறுதியாக இணைவோம். மற்றபடி ‘வணங்கான்’ பட வேலைகள் தொடரும் என தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சூர்யா தரப்பும் பாலாவின் அறிக்கையை ஆமோதித்து, எப்போது பாலா அண்ணன் உடன் துணை நிற்போம் என தெரிவித்தது. ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகினாலும் அந்த படத்தின் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்றது.
அந்த படத்தில் அதரவா நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இவர் ஏற்கனவே பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் அட்டகாசமான நடிப்பை வழங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் வரும் 9 ஆம் தேதியில் இருந்து துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சூர்யாவை தொடர்ந்து படத்தின் கதாநாயகியும் மாற்றப்பட்டுள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ‘வணங்கான்’ படத்தின் முழு விபரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இந்தப்படத்திற்கு சூர்யா ரசிகர்கள் எந்தளவிற்கு வரவேற்பு தருவார்கள் என்பதை பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.
