பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இன்று தனது 46வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் இயக்குநராகத் திரைத் துறையில் தனது பயணத்தைத் துவங்கிய செல்வராகவன், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என். ஜி. கே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சாணிக்காயிதம், பீஸ்ட், பகாசூரன் திரைப்படங்களில் நடிகர் அவதாரமும் எடுத்துள்ளார்.
தான் இயக்கும் திரைப்படங்களுக்கென தனி பாணியைக் கடைப்பிடித்து, எப்போதும் பெண் கதாபாத்திரங்களை மிகவும் அழுத்தமாக பதிவு செய்யும் செல்வராகவனுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவன் நடித்திருப்பதாக கூறி அவருக்கு படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
லத்தி திரைப்படத்தைத் தொடர்ந்து விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ரித்துவர்மா கதா நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு படத்தொகுப்பு பணிகளை விஜய் வேனுக்குட்டு கவனித்து வருகின்றனர்.
மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்த போது, படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த லைட் வாகனம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தின் அருகே அதிவேகமாக சென்று விபத்து நேரிட்டது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ள படக்குழு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு, சிரஞ்சீவி எனும் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே எஸ் ஜே சூர்யா இருக்க, தற்போது செல்வராகவனும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
