ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தியாகராஜன் குமாரராஜா. டார்க் வகை திரைப்படமாக உருவான ஆரண்ய காண்டம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. தேசிய விருதையும் இந்த படம் தட்டிச் சென்றது. இதைத்தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கினார். விஜய் சேதுபதி சமந்தா பகத் பாஸில் ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
தியாகராஜன் குமாரராஜா தயாரிப்பு மேற்பார்வையில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் கடந்த 18-ஆம் தேதி ஆந்தாலஜி தொடர் ‘மாடர்ன் லவ்: சென்னை’ வெளியானது. இதில் தியாகராஜன் குமாரராஜாவின் படைப்பும் இடம் பெற்றுள்ளது. இந்தத் தொடருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் ஷான் ரோல்டான் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
இந்தத் தொடர் குறித்து சமீபத்தில் தியாகராஜன் குமாரராஜா அளித்த பேட்டி ஒன்றில், இளையராஜா குறித்தும் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் ஒரு விரிவான விளக்கத்தை அவர் அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “உங்கள் ஹீரோக்களை அருகில் சென்று பார்க்காதீர்கள் என்று சொல்வார்கள். ஆனால் இளையராஜாவின் அருகில் சென்ற பிறகுதான் அவரை எனக்கு முன்பை விட இன்னும் அதிகமாக பிடிக்கிறது.
இளையராஜா அதிகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர். அவர் மிகவும் பணிவானவர். அதையே பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவருடன் பணியாற்றுவது மிகவும் கடினம் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், அதில் உண்மை கிடையாது. அவரைப் பொறுத்தவரை அவருடைய நேரத்தை வீணடிக்க கூடாது. அவரிடம் சென்று நம்முடைய புத்திசாலித்தனத்தை காட்ட முயற்சிக்கக் கூடாது.
ஏனென்றால், அதைப் பற்றி அவர் அக்கறைப்பட மாட்டார். அவருக்கு பிடிக்காத படத்தை அவரிடம் கொண்டு சென்றால் கூட அவர் இந்தப் படம் சரியில்லை என்று நேரடியாக சொல்லிவிடுவார். ஆனால், அதன்பின்னர் அப்படத்தை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்து விடுவார். இந்தத் தெளிவை புரிந்துகொண்டால் அவரைப் புரிந்து கொள்வது எளிதாகிவிடும்.
அவரிடம் சென்று முட்டாள்தனமாக பேசினால் அவருக்கு பிடிக்காது. முட்டாள்தனத்தை அவர் சகித்துக் கொள்ளவே மாட்டார். அவரிடம் தெரியாது என்று சொல்லிவிடலாம். ஆனால், தெரியாததை தெரிந்தது போல அவரிடம் பேசினால் பிரச்சினை வரலாம்” என்று தியாகராஜன் குமாரராஜா கூறியுள்ளார்.
