வெற்றிமாறன் இயக்கத்தில் இறுதியாக அசுரன் திரைப்படம் 2019ம் ஆண்டு வெளியாகியிருந்தது. தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விடுதலை படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் நிறைவுப் பெற்றதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து விடுதலை படத்தில் இருந்து ‘உன்னோட நடந்தா’ என்ற முதல் பாடல், கடந்த மாதம் 8ம் தேதி வெளியானது. இளையராஜா இசையில் தனுஷ், அநன்யா பட் பாடியிருந்த இப்பாடலை சுகா எழுதியிருந்தார். இந்நிலையில், தற்போது விடுதலை படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் 8ம் தேதி விடுதலை படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜாவின் இசை நிகழ்ச்சியுடன் விடுதலை ட்ரெய்லர், பாடல்கள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. தற்போது இசை வெளியீட்டு விழா தேதியை மட்டும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் விடுதலை படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் விரைவில் வெளியாகும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படம் மார்ச் 31ம் தேதி ரிலீஸாகும் என செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், தற்போதைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா அறிவிப்பில் ரிலீஸ் தேதி இடம்பெறவில்லை. இதனால் விடுதலை படத்தின் ரிலீஸ் தேதி தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதேநேரம், விடுதலை ட்ரெய்லரோடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்த்துள்ளனர்.
ஆனால், விடுதலை திரைப்படம் ஏற்கனவே எதிர்பார்த்த படி மார்ச் 31ம் தேதி ரிலீஸாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சிம்புவின் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் அப்டேட்டுக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தற்போது வரை விடுதலை ரிலீஸான பின்னரே வாடிவாசல் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
