நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வருகிற மார்ச் 30 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பத்து தல. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அடுத்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தை துல்கர்சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். சிலம்பரசனின் 48 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்தபடம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த கதையானது நடிகர் ரஜினிகாந்திற்கு சொல்லப்பட்ட கதை என்றும் பல்வேறு காரணங்களால் அது நடக்காத நிலையில் சிலம்பரசன் நடிக்க இருப்பதாக சொல்லபடுகிறது.
இது குறித்து சிலம்பரசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கனவு நிஜமானது” என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் தான் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க வைக்க நடிகைகள் பூஜா ஹெட்ச், ராஷ்மிகா மந்தனா மற்றும் திஷா படானியை தேர்வு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களில் யார் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பார்கள் என தெரியவில்லை, ஆனால் இதில் யார் நடித்தாலும் சிம்புவுடன் நடிக்கும் முதல் படம் என்பதால் புதிய ஜோடியை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அதேபோல் மூவருமே தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சையமான நடிகைகள் என்பதோடு, தெலுங்கு மற்றும் இந்தியிலும் நல்ல மார்க்கெட்டுடன் இருக்கிறார்கள். அதனால் சிம்புவின் படத்தின் மீதான பார்வையும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
