சின்னத்திரையில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் பிரபலமானவர் கவின். சீரியலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மூன்றாவது சீசனில் கலந்துக்கொண்ட இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் குவிந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெல்லுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கவின். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். பிக்பாஸ் வீட்டில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கவின் நடிப்பில் உருவான ‘லிப்ட்’ படம் வெளியானது.
ஹாரர் த்ரில்லர் படமாக வெளியான ‘லிப்ட்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘ஆகாச வாணி’ என்ற வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்தார். இதனையடுத்து ‘டாடா’ என்ற படத்தில் நடித்தார் கவின். அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இந்தப்படத்தை இயக்கினார்.
ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ். அம்பேத்குமார் தயாரித்த ‘டாடா’ படத்தினை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்தப்படத்தில் கவின் ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்தார். மேலும் இவர்களுடன் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இந்நிலையில் கவின் அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஹிட் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள இவர் முதன்முதலாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ரோமியோ பிசர்ஸ் ராகுல் இந்தப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக பிரியங்கா மோகன் இந்தப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் ‘டான்’ படத்திலும் நடித்தார். தற்போது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் நடித்து வருகிறார். இதனையடுத்து தற்போது கவின் ஜோடியாக இவர் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
