இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் குண்டூர் காரம். பொங்கல் ரேஸில் வெளியான இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ”அலவைக்குந்தபுரமலோ” படத்தை பட்டி திங்கரிங் செய்தது போல் இருப்பதாக ரசிகர்கள் பலரும் விமர்சித்தனர்.
மகேஷ் பாபு மட்டுமல்லாமல் ரம்யா கிருஷ்ணன், ஸ்ரீலீலா, ஜெயராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜாதி அரசியல் செய்து வரும் பிரகாஷ் ராஜ், அரசியலுக்காக தனது மகளின் வாழ்க்கையையே அழித்து வேறு பாதையில் அழைத்து செல்கிறார். அதன்பின் மகன் மகேஷ் பாபு வளர்ந்த பின், பிரகாஷ் ராஜிற்கு எப்படி ரம்யா கிருஷ்ணன் பதிலடி கொடுக்கிறார் என்பதே கதை.
இந்த படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும், நாயகி ஸ்ரீலீலாவின் ஆட்டம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. இந்த படத்திலேயே மகேஷ் பாபு ஒரு காட்சியில் ஸ்ரீலீலாவுடன் டான்ஸ் ஆடும் போது, எனர்ஜியை மேட்ச் பண்ணவே முடியலை என்று நேரடியாக கூறுவார். நீண்ட காலத்திற்கு பின் சாய் பல்லவி எப்படி டான்ஸில் ஒரு போடு போட்டாரோ, அது போல் ஸ்ரீலீலா கவர்ச்சி நடனத்தில் வெளுத்து கட்டுகிறார்.
இவரின் டான்ஸுக்காகவே சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் குர்ச்சி மடத்தபெட்டி பாடலில் ஸ்ரீலீலா ஆடிய நடனம் பலரையும் வியக்க வைத்துள்ளது. சிறு வயதிலேயே பரதநாட்டியம் பயின்ற ஸ்ரீலீலா, அமெரிக்காவை சேர்ந்தவர். இவரின் பெற்றோர் பிரிந்த பின், பெங்களூரில் அம்மாவுடன் வளர்ந்துள்ளார்.
அதன்பின் மருத்துவரான ஸ்ரீலீலா, 2019ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான ”கிஸ்” திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தற்போது தெலுங்கு சினிமாவின் உச்ச நாயகியாக ஸ்ரீலீலா வளம் வருகிறார். நிதின், ராம் பொத்தினேனி, மகேஷ் பாபு, பவன் கல்யாண் என்று அடுத்தடுத்து உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார் ஸ்ரீலீலா. இதனால் விரைவில் தமிழ் சினிமாவிலும் நடிக்க தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.