கொரட்டலா சிவா இயக்கும் NTR 30 படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் அமர்க்களமாக தொடங்கியது. ஜூனியர் NTR ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க, அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றதைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்பும் வேகமெடுத்துள்ளது. NTR 30-ஐ தொடர்ந்து கேஜிஃஎப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், அதற்கும் முன்பாக பாலிவுட்டில் மாஸ்ஸாக என்ட்ரி கொடுக்க ரெடியாகிவிட்டார் ஜூனியர் NTR.
இந்தியில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ஸ்பை த்ரில்லர் படங்கள் அடுத்தடுத்து பல யுனிவர்ஸாக வெளியாகி வருகின்றன. ஜனவரியில் ஷாருக்கான் நடித்து வெளியான பதான் திரைப்படமும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்பை த்ரில்லர் யுனிவர்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக வார் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் முடிவெடுத்துள்ளது. 2019ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப், வாணி கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 170 கோடி பட்ஜெட்டில் சித்தார்த் ஆனந்த் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 450 கோடி வரை வசூலித்தது.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் டோலிவுட் ஹீரோ ஜூனியர் NTR நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜூனியர் NTR உடன் ஹிருத்திக் ரோஷன் நடிப்பதும் உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், வார் முதல் பாகத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்துக்கு பதிலாக, அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்கவுள்ளாராம். ஷாருக்கானின் பதான் படத்தை ஹிட் கொடுத்த சித்தார்த் ஆனந்த், அடுத்து ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடிக்கும் ஃபைட்டர் படத்தை இயக்கவுள்ளார். அதனால் தான் அவருக்குப் பதிலாக அயன் முகர்ஜி வார் 2 படத்தில் கமிட் ஆகியுள்ளாராம்.
வார் 2 வழக்கம் போல ஸ்பை திரில்லர் ஜானரில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால், டோலிவிட்டில் இருந்து ஜூனியர் NTR ஐ அலேக்காக தூக்கியுள்ளது யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ். ஏற்கனவே இந்தியளவில் பிரபலமான ஜூனியர் NTR, ஆர்.ஆர்.ஆர் படம் மூலம் சர்வதேச அளவில் மாஸ் காட்டி வருகிறார். இதனால் ஹிருத்திக் ரோஷன் – ஜூனியர் NTR காம்போவில் இந்தப் படம் உருவாக உள்ளதாம். இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
