கடந்த 2019-ம் ஆண்டு தமிழில் கார்த்தி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நாயகி, பாடல்கள் என்று எதுவும் கிடையாது. இருப்பினும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் எல்சியூ என்ற ஒரு புதிய திரைக்களத்தையும் கைதி மூலம் லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார்.
இந்தப் படத்தை இந்தியில் அஜய் தேவ்கன் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். நடிகை அமலா பால், அஜய் தேவ்கனின் மனைவியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடித்துள்ளார். படத்திற்கு ‘கேஜிஎஃப்’ புகழ் ரவிபஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
கைதி படத்தில் பாடல்களே இல்லாத நிலையில், போலா படத்தில் அஜவ் தேவ்கன் குத்து பாடல் வைத்து லட்சுமி ராயை டான்ஸ் ஆட வைத்துள்ளார். இந்நிலையில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் முதல் நாளில் ரூ.11.20 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாளான நேற்று ரூ.7.40 கோடியை வசூலித்திருக்கிறது.
மொத்தம் இரண்டு நாட்களில் ரூ.18.60 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் 35 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றதால் வசூலில் அது பிரதிபலித்துள்ளது. இருப்பினும் இன்றும் நாளையும் விடுமுறை நாட்களாக இருப்பதால் வசூல் சற்று கூடலாம் என சினிமா வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
