கோலிவுட்டின் மிகப் பெரிய கனவுத் திரைப்படங்கள் என்றால், அது பொன்னியின் செல்வனும் மருதநாயகமும் தான். பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியது. முன்னதாக கமலும் இந்தப் படத்தை எடுக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கமலின் இன்னொரு கனவுப் படமான மருதநாயகம் 1997 அக்டோபர் 16ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை கமல்ஹாசனே இயக்கி சொந்தமாக தயாரிப்பதாக இருந்தது.
18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த முகமது யூசுஃப் கான் குறித்த திரைப்படம்தான் மருதநாயகம். 1997ம் ஆண்டே மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுக்க முயற்சித்தார் கமல். எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினி, சிவாஜி ஆகியோரும் கலந்துகொண்டனர். இதனால் மருதநாயகம் திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.
மருதநாயகம் படத் தொடக்கவிழாவில் பங்கேற்ற இங்கிலாந்து ராணிக்கு ஒரு சண்டைக் காட்சியும் போட்டுக் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிப்பு, தயாரிப்பு என பிஸியாகிவிட்டார் கமல். அதனால், மருதநாயகம் படத்தை மீண்டும் இயக்க ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதில், அவருக்குப் பதிலாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வனை தொடர்ந்து பா ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடயே தான் மருதநாயகம் படத்தில் விக்ரமை நடிக்க வைக்க கமல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மருதநாயகம் படத்தை கையில் எடுக்க முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தின் மிக முக்கியமான 30 நிமிட காட்சிகளை படமாக்கிவிட்டார் கமல். ஆனால், அந்த காட்சிகளும் இப்போது இடம்பெறும் என சொல்லப்படுகிறது.
மருதநாயகம் படத்தின் 30 நிமிட காட்சிகள் முடிந்துவிட்டது, ஆனால், அதுதான் இதில் கடினமான பகுதி. அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு என்ற டைட்டிலோடு தான் படம் ஆரம்பிக்கும். அதனால், நடிகர்களின் தோற்றம் எதுவும் பெரிய பிரச்சினையாக இருக்காது. அதனால், தனக்கு பதிலாக விக்ரம் நடித்தாலும் நன்றாக இருக்கும் என்றே கமல் நினைக்கிறாராம். இதுபோன்ற பாசிட்டிவான விசயங்களால் விக்ரம் நடிப்பில் மருதநாயகம் திரைப்படம் மீண்டும் உருவாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
