துருவங்கள் பதினாறு படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். முதல் படத்தில் கிடைத்த வரவேற்பால் தனது அடுத்த படைப்பாக நரகாசூரன் படத்தை இயக்கினார். அரவிந்த் சாமி, சந்திப் கிஷன், திரிஷா, ஆத்மிகா நடிப்பில் உருவான இந்தப்படம் இன்றுவரை வெளியாகவில்லை.
அதனை தொடர்ந்து அருண் விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய மாபியா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை முற்றிலுமாக நிறைவேற்றவில்லை. இதனை தொடர்ந்து தனுஷ், மாளவிகா மோகனின் நடிப்பில் ‘மாறன்’ படத்தை கார்த்திக் நரேன் இயக்கினார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான அதர்வாவுடன் இணைந்த கார்த்திக் நரேன், நிறங்கள் மூன்று என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில், நடிகர்கள் சரத்குமார் மற்றும் ரகுமான் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் சூட்டிங் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் நேற்று படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டார்.
அதன்படி நிறங்கள் மூன்று படத்தின் டிரைலர் வீடியோவை இன்று ஏ.ஆர் ரகுமான் மற்றும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ஆகியோர் வெளியிடுவார்கள் என்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது நிறங்கள் மூன்று திரைப்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதை களத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த டிரைலர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.