டாக்டர் படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கடந்தாண்டில் டான், பிரின்ஸ் என இரண்டு படங்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தற்போது மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார். மடோன் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் எஸ்கே ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மாவீரன் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் மாதம் படம் ரிலீஸ் ஆகிறது. மேலும், நீண்ட நாட்களாக சிஜி பணிக்காக வெளிவராமல் இருந்த இவரது ‘அயலான்’ திரைப்படமும் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் எஸ்கே 24 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிப்பது உறுதியாகியுள்ளது. ரங்கூன் திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமி, எஸ்கே 24 படத்தை இயக்குவதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் தொடங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது.
தீவிரமான ஆக்ஷன் ட்ராமாவாக உருவாக இருக்கும் இந்தக் கதை 1960-ஐ பின்னணியாகக் கொண்டது. இதில் ராணுவ வீரராக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்காக சிவகார்த்திகேயன் கடுமையான பயிற்சிகளை மும்பையில் மேற்கொண்டார். மேலும் ராணுவ வீரர்கள் காண உடல் மொழி அந்த சைகைகள் குறித்தும், ஆயுதங்களை கையாள்வது பற்றியும் சிவகார்த்திகேயன் கற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது.
கடந்த வாரம் படபூஜை வெறும் விமர்சையாக நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளரான கமலஹாசன் விழாவில் கலந்து கொண்டு பூஜையை தொடங்கி வைத்தார். இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம் 60 நாட்கள் காஷ்மீர் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டு இருந்தது. இதற்காக படுகுஷியுடன் படக்குழுவினர் காஷ்மீர் சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக தளத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் காஷ்மீர் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு ஜி-20 மாநாடு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், உரிய அனுமதியை படக்குழுவினர் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு வேலையை நிறுத்திவிட்டு அனைவரும் ஊர் திரும்பியுள்ளனர். இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
