நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் சந்திரமுகி. ரஜினிகாந்தின் கேரியரில் பெஸ்ட் படங்களில் இதுவும் ஒன்று. படத்தை பிரபல இயக்குநர் பி வாசு இயக்கியிருந்தார். கதைக்களம் மிகவும் மிரட்டலாக அமைந்திருந்தது.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்த நிலையில், தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகி வருகிறது. படத்தில் லாரன்சுடன் கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு என நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது.
முன்னதாக படத்தின் சூட்டிங் மைசூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் அடுத்தக்கட்ட ஷெட்யூல் நிறைவடைந்தது. இதனிடையே படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் மும்பை சென்றனர். அங்கு படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சந்திரமுகி கேரக்டரில் நடிப்பது கங்கனா ரணாவத்தா அல்லது லட்சுமி மேனனா என கேள்வி எழுந்த நிலையில் தற்போது இதற்கு விடை கிடைத்துள்ளது. அதாவது படத்தில் சந்திரமுகி கேரக்டரில் லட்சுமி மேனன்தான் நடிக்கிறாராம். இது தொடர்பாக அவருக்கு பிளாஷ்பேக் காட்சிகளும் இருப்பதாக கூறப்படுகிறது.இந்த படத்தின் வாயிலாக லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.