லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன், முதன்முதலில் தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றி மக்களிடம் பிரபலமடைந்தார். தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கும் லெஜண்ட் சரவணன், சினிமா உலகில் கால் பதிக்க முடிவு செய்தார். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான படத்திற்கு ‘தி லெஜண்ட்’ எனப் பெயரிடப்பட்டது.
இதனை லெஜண்ட் சரவணனே தயாரித்தார். இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா, மறைந்த விவேக், பிரபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். இந்தப் படத்தின் ‘மொசலோ மொசலு’, ‘வாடி வாசல்’ ஆகிய இரண்டு பாடல்களும் யூ-ட்யூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும், படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவை லெஜண்ட் சரவணன் பிரம்மாண்ட நடத்தி முடித்திருந்தார். இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன் விஞ்ஞானியாக நடித்திருந்தார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும், ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டது.
குறிப்பாக உலகறிந்த நடிகர் லெஜண்ட் சரவணன் தனது நடிப்பிற்காகவும், பேச்சுக்காகவும் புகழ் பெற்றார். இதையடுத்து பல வகையில் பல விதமான பேட்டிகள் கொடுத்து வைரல் ஆனார், லெஜண்ட். அவருக்கென தனி ரசிகர் பட்டாளங்கள் முளைக்க ஆரம்பித்தது. படம் வெளியாகி பல நாட்கள் ஆன போதும் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
இந்த சூழலில் இந்தப் படம் மார்ச் 3 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் ஸ்ட்ரீம் ஆகும் என தெரிகிறது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். மேலும் லெஜண்ட் சரவணனிடம் ரசிகர்கள் சிலர் அடுத்தப்பட அறிவிப்பு குறித்த அப்டேட் எப்போது என ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.