நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் நடிப்பில் லியோ படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்டவர்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து காஷ்மீரில் நடைபெற்றுவரும் சூட்டிங்கிற்காக படக்குழுவினர் புறப்பட்டு சென்றனர். அங்கு கடுமையான குளிருக்கிடையில் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. 60 நாட்கள் தொடர்ந்து அங்கு சூட்டிங் நடத்த லோகேஷ் திட்டமிட்டுள்ளார்.
இதற்கென தனி விமானத்தில் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் புறப்பட்டு சென்ற வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் காஷ்மீரில் கடுமையான குளிர் நிலவி வருவதால், காலை 11 மணிமுதல் 5 மணிவரை மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூட்டிங் 60 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு விஜய் நடித்த படத்தின் காட்சி ஒன்று இணையதளத்தில் லீக் ஆகியது. இதனால் லோகேஷ் கனகராஜ் மிகுந்த கோபமடைந்துள்ளாராம். இனிமேல் சூட்டிங் நடைபெறும் இடத்தில் யாரும் செல்போன் எடுத்து வரக்கூடாது என்று தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தீவிர சோதனைக்கு பிறகே அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்களாம். இதனிடையே படக்குழுவை சேர்ந்தவர் ஒருவரது வீட்டில் நடந்த துக்க சம்பவம் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடுமையான குளிருடன் காஷ்மீரின் சில இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலநடுக்கமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து தீபாவளியை ஒட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி ரிலீசானால், ஒரே ஆண்டில் விஜய்யின் இரண்டு படங்கள் ரிலீசான உற்சாகம் ரசிகர்களுக்கு கிடைக்கும்.
