இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ”லியோ”. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், சாண்டி, கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நேற்று வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது.
லியோ படத்தின் முதல் பாதி சிறப்பாக அமைந்தாலும், இரண்டாம் பாதி விமர்சனங்களை பெற்று வருகிறது. வில்லன்கள் பலமாக இல்லாததும், லாஜிக் மீரல்களும் இருப்பதால், அதிக விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனாலும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வார இறுதி விடுமுறை மட்டுமல்லாமல், அடுத்த வாரமும் விடுமுறை தொடரும் என்பதால் லியோ படத்தின் வசூல் நிச்சயம் ரூ.500 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.148.5 கோடி என்று தயாரிப்பாளர் லலித் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடப்பாண்டில் வெளியான திரைப்படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக லியோ சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர் லலித் குமார் கூறும் போது, 4 நாட்களுக்கு முன் விஜய் சாரிடம் பேசிய போது, கோர்ட்டுக்கு போனியா.. எதுக்கு போன என்று கேட்டார். அதன்பின் பேசும் போது, எந்த ஷோ போடப்போற என்று கேட்டார். அப்போது 9 மணி ஷோ என்று கூறினேன்.
விஜய் சாரை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் படம் ரிலீஸாக வேண்டும். நான் விஜய் சாரிடம் ஏதாவது ரிலீஸில் பிரச்சனையென்றால் நிச்சயம் அடுத்து வீட்டின் பக்கமே வர மாட்டேன் என்றேன்.. அதற்கு விஜய் சார், தப்பாச்சுனா பார்த்துக்குறேன் என்று கூறினார். விஜய் சார் மகிழ்ச்சியாக உள்ளார்.
லியோ படத்தை பொறுத்தவரை ரூ.1000 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இந்தி மார்க்கெட்டில் இருந்து நாங்கள் அதிகம் எதிர்பார்க்கவில்லை. மாஸ்டர் படத்தின் போதே உங்களுக்கு என்ன பரிசு வேண்டும் என்றேன். அப்போது எனக்கு சம்பளத்திற்கு மேல் எதுவும் வேண்டாம் என்று தெளிவாக கூறிவிட்டார். விஜய் சாரிடம் ஒரேயொரு நேர்காணல் மட்டும் கேட்டுள்ளோம். அது நடக்குமா என்பது முழுதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.