ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை தானே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் வசூலிலும் சக்கை போடு போட்டது.
அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற தற்போது பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அடுத்ததாக ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் பிரதீப் ஹீரோவாக நடிக்க இருக்கின்றார். இந்நிலையில் ஹீரோவாக நடிக்க பல வாய்ப்புகள் வரும் சமயத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு பிரதீப்பிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் முதலில் ஹீரோவாக சில படங்களில் நடித்துவிட்டு தான் மற்ற நடிகர்களின் படங்களை இயக்க இருப்பதாக பிரதீப் முடிவெடுத்துள்ளார். இதன் காரணமாக தான் தளபதியின் படத்தை இயக்கும் வாய்ப்பை பிரதீப் நிராகரித்ததாக தகவல் வந்துள்ளது.
லவ் டுடே என்ற ஒரு படம் கொடுத்த வெற்றியின் நம்பிக்கையில் முழு நேர ஹீரோவாகவே மாறிவிட்டார் பிரதீப்.. குறிப்பாக விஜய்யின் படத்தை இயக்க பலபேர் தவம் இருக்கும் நிலையில் பிரதீப் அந்த வாய்ப்பை மிஸ் செய்தது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களின் ஆசை மற்றும் கனவாக இருப்பது தளபதி விஜய்யை இயக்க வேண்டும் என்பது தான். விஜய்யின் கால்ஷீட்டிற்காக பல தயாரிப்பாளர்கள் காத்திருக்க லோகேஷ் கனகராஜ் போல அல்லது அட்லீயை போல விஜய்யின் ஆஸ்தான இயக்குனராக ஆகவேண்டும் என பல இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் ஏன் இப்படி ஒரு வாய்ப்பை அவர் விட்டுவிட்டார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. லியோ திரைப்படத்தை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.