பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்தப் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சாதிய ஒடுக்குமுறைகளை பேசிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கர்ணன் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். தனுஷ், ரஜிஷா விஜயன், யோகி பாபு, நட்டி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாரி செல்வராஜ் மூன்றாவதாக இயக்கியுள்ள திரைப்படம் மாமன்னன்.
இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நாற்காலி அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மாமன்னன், தமிழகம் முழுவதும் பேசப்பட்டது. மாமன்னன் கதாபாத்திரத்தில் வாழ்ந்த வடிவேலு, படம் முழுக்க ரசிகர்களுக்கு இன்னொரு பரிணாமத்தில் காட்சியளித்தார்.
மனிதன் திரைப்படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலினின் நடிப்பை பறைசாற்றும் வகையில் அமைந்தது மாமன்னன் திரைப்படம். வீரம் கொண்ட இளைஞராய் படம் முழுக்க வந்து போன அவர், அதிவீரனாய் நம் மனதில் பதிந்தார். மாமன்னனுக்கே அச்சாரம் போடும் வகையில் அமைந்ததுதான் பகத் பாசில் கதாபாத்திரம். சேலம் மாவட்டத்து ரத்தினவேலுவாக வாழ்ந்த அவர், வில்லன் கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கினார்.


இந்த மூன்று பேரில் சிறப்பான நடிப்பால் மாமன்னன் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கோலம் பூண்டது. 35 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 70 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் அள்ளியது.இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேல் பாடும் பாடல் ஒன்றை பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
காரில் சென்றுகொண்டிருக்கும் வடிவேலு “ஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக…” என்ற பழைய பாடலை அழகாக பாடிக்கொண்டிருக்கிறார். ப்ளாக் அன்ட் ஒயிட்டிலிருக்கும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள மாரி செல்வராஜ், “காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக்கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இந்த நொடி தான்” என பதிவிட்டு வடிவேலுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.