சின்னக் கலைவாணர் விவேக், மயில்சாமி என தொடர்ந்து நகைச்சுவை நடிகர்களின் மறைவுச் செய்தி ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி வரும் நிலையில், இன்னொரு நகைச்சுவை நடிகரின் மறைவு செய்தி ரசிகர்களை மீண்டும் அழ வைத்துள்ளது. விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்தவர் கோவை குணா.
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் முதல் சீசன் டைட்டில் வின்னரான கோவை குணா இன்று உடல் நலக் குறைவால் காலமானார். கோவை குணா ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர் என்பதை யாருமே மறக்கமாட்டார்கள்.
கொரோனா நோய் பரவல் தொடங்கிய நேரத்திலேயே சொந்த ஊரான கோவைக்கே சென்று செட்டில் ஆகி விட்டார் கோவை குணா. கலக்கப் போவது யாரு மற்றும் அசத்தப் போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் காமெடி செய்து ரசிகர்களை வார வாரம் சிரிக்க வைத்த கோவை குணா, உடல் நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கோவை குணா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கலக்கப் போவது யாரு முதல் சீசன் டைட்டில் வின்னராக ஆன கோவை குணாவுக்கு சினிமாவில் அதிகமாக வாய்ப்புகள் குவியவில்லை. சென்னை காதல் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் மற்றும் கவுண்டமணி போல மிமிக்ரி செய்து அசத்துவதில் கெட்டிக்காரர் கோவை குணா.
ரசிகர்களை பல ஆண்டுகள் சிரிக்க வைத்து வந்த கோவை குணா திடீரென உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், மதுரை முத்து உள்ளிட்ட அவருடன் இணைந்து பணியாற்றிய காமெடி நடிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கோவை குணாவின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் தற்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
