Entertainment

செல்போனும், டேட்டிங் ஆப்-களும்.. எப்படி இருக்கு பகாசூரன்? இதோ விமர்சனம்!

செல்போனும் அதிலுள்ள டேட்டிங் செயலிகளும் இளம் தலைமுறையினரை, குறிப்பாக பெண்களை எப்படியெல்லாம் சீரழிக்கின்றன என்பதை விளக்க முயன்றிருக்கும் படம்தான் ‘பகாசூரன்’. முன்னாள் ராணுவ அதிகாரியான நட்டி நட்ராஜ் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி குற்றங்களையும் அதன் பின்னணிகளையும் வீடியோக்களாக வெளியிடுகிறார். அப்படியான ஒரு குற்றச் சம்பவம் குறித்து அவர் வீடியோ ஒன்றில் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது அண்ணன் மகள் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்தி வர, சம்பவ இடத்திற்கு ஓடுகிறார்.

அவரது மரணத்தில் சந்தேகம் எழ குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முனைப்பில் விசாரணையில் இறங்குகிறார் நட்ராஜ். அதற்கு அப்படியே மறுபுறம் ‘என் அப்பனல்லவா’ என பாட்டு பாடிக்கொண்டு அறிமுகமாகும் செல்வராகவன், தீரா கொலைவெறியுடன் தேடித்தேடி சிலரை கொலைசெய்து தன் ஆத்திரத்தை தீர்த்துகொள்ளும் அவரிடம் சொல்லமுடியா சோகம் ஒளிந்திருக்கிறது. அவர் தேடிக்கொள்ளும் நபர்கள் யார்? அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? நடராஜனின் அண்ணன் மகள் தற்கொலையை தூண்டியது யார்? – இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் படம் தான் பகாசூரன்.

Advertisement

ஆன்ட்ராய்டு மொபைலும், அதிலிருக்கும் டேட்டிங் ஆப்களும் ஆபத்தானவை என்பதைச் சொல்லி இளம் பிள்ளைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவிடவேண்டும் என்கிற இயக்குநர் மோகன்.ஜியின் முயற்சியை படம் புரிய வைக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் கொலைகள், நட்டியின் இன்டலிஜன்ஸை காட்ட வைக்கப்பட்ட காட்சிகள் ஒருபுறமும், மறுபுறம் ‘மேங்கோ கால் டாக்ஸி’, கல்வித் தந்தை பட்டம் கொண்ட அரசியல்வாதி, கதைக்களமாக பெரம்பலூரை பயன்படுத்திக்கொண்டது என அரசியல் குறியீடுகளுக்கு இந்தப் படத்திலும் இயக்குநர் எந்த குறையும் வைக்கவில்லை.தொடக்கத்தில் விறுவிறுப்பாக செல்லும் படம் ஒரு கட்டத்திற்கு பிறகு அதன் லாஜிக் மீறல்களால் வேகத்தை இழக்கிறது. இரண்டு மாணவிகளின் தற்கொலையை மையப்படுத்தி எழுப்பப்பட்டிருக்கும் கதையில், அவர்கள் தங்களை மாய்த்துக் கொண்டதற்கான காரணங்கள் வலுவிழந்திருப்பதால் ஒட்டமுடியவில்லை. அதனால் எமோஷனல் காட்சிகள் பெரிதாக கைகொடுக்கவில்லை.

படத்தில் வரும் சண்டைக்காட்சிகளில் படு செயற்கைத்தனம். படத்தின் முதல் பாதியில் டேட்டிங் ஆப்கள் தான் பிரச்சினைகளுக்கு காரணம் என கூறிவிட்டு, மையக்கருவான இரண்டாம் பாதியில் அதைப்பற்றி பேசாமல் மற்றொரு பிரச்சினையை கையிலெடுத்திருப்பதன் மூலம் படத்தின் நோக்கம் தெளிவில்லாமல் போகிறது. சுவாரஸ்யமின்றி எளிதாக நடக்கும் விசாரணைகள், இழுத்துச் செல்லப்பட்டட்டட்ட இரண்டாம் பாதி அயற்சி. எமோஷனல் காட்சி ஒன்றில் உடைந்து அழும் செல்வராகவன் நடிப்பில் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார். கொலை வெறிக்காட்சிகளில் ‘சாணிக்காயிதம்’ செல்வா சார் சாயலிருந்தாலும் கதாபாத்திரத்திற்கு பொருந்தி போகிறார். நட்டி நட்ராஜ் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

Advertisement

தவிர, ராதாரவி, தாரக்ஸி, கே.ராஜன், கூல் சுரேஷ், சசிலயா தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். ‘என்னப்பன் அல்லவா’ பாடலில் திரையரங்கை அதிர வைக்கிறார் சாம்.சி.எஸ். மற்ற பாடல்கள் எதுவும் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவில் காட்சிகள் படத்தின் தரத்தை கூட்ட உதவியிருக்கின்றன. மோகன்.ஜியின் முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் தொழில்நுட்பத்தின் வலு கூடியிருக்கிறது.

பெண்களைப் பாதுகாப்பது குறித்து வகுப்பெடுக்கும் படத்தில் ஆபாச நடனம் வைக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. மொத்தத்தில் எதிர்பார்ப்புடன் தொடங்கும் ‘பகாசூரன்’ படத்தின் முதல் பாதி அடுத்தடுத்த தர்க்கப் பிழைகளாலும், பழமைவாதத்தாலும், எடுத்துக்கொண்ட கருத்தில் தடுமாற்றத்தை நிகழ்த்தியதன் மூலம் படம் எதிரிகளை வதம் செய்யவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top