மங்காத்தா படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் பல வருடம் கழித்து சிம்புவுக்கும் கம்பேக் படமாக மாநாடு திரைப்படம் அமைந்தது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் கதையை உருவாக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். மீண்டும் சிம்புவுடன் வெங்கட் பிரபு இணைய வேண்டும் என்றும் அஜித்தை வைத்து மங்காத்தா 2 எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை தமிழில் அறிமுகம் செய்யும் விதமாக வெங்கட் பிரபு இந்த கஸ்டடி படத்தை இயக்கி உள்ளார். தற்போது அந்த படத்தின் செம அதிரடியான டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
வெங்கட் பிரபுவின் கஸ்டடி என்கிற அடைமொழியுடன் உருவாகி உள்ள இந்த படத்தில் நாக சைதன்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவரது லுக் தான் டீசரில் ஒட்டவே ஒட்டாமல் துருத்திக் கொண்டு இருப்பதை போல இருந்தாலும், டீசர் கட் பயங்கரமாக உருவாக்கப்பட்டு நிச்சயம் படம் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கை கொடுக்கிறது.
கஸ்டடி படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோலில் சரத்குமாரும் மாஸ் காட்டுகிறார். நாக சைதன்யா, அரவிந்த் சாமி சண்டைக் காட்சிகள் எல்லாமே தனி ஒருவன் படத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு வேறலெவலில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
பாலா இயக்கத்தில் சூர்யாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்த க்ரித்தி ஷெட்டிக்கு அந்த படம் மிஸ் ஆனாலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியர் படத்தில் ஹீரோயினாக க்ரித்தி ஷெட்டி நடித்த நிலையில், அந்த படம் படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள கஸ்டடி திரைப்படம் வரும் மே 12ம் தேதி சம்மர் ரிலீஸாக வெளியாக உள்ளது என்கிற ரிலீஸ் தேதி அறிவிப்பையும் டீசர் உடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நாக சைதன்யாவுக்கு வெற்றி கிடைக்காத நிலையில், தமிழில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.
