சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அதனால் தற்போதைக்கு சூர்யா 42 என்று அழைத்து வருகிறார்கள். அந்த படம் மூலம் பாலிவுட் நடிகைகளான திஷா பதானி மற்றம் மிருணாள் தாகூர் ஆகியோர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்கள். சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் சேர்ந்து யுவி கிரியேஷன்ஸும் சூர்யா 42 படத்தை தயாரித்து வருகிறது. படத்திற்கு டி.எஸ்.பி. இசையமைக்கிறார். சூர்யா 42 படத்தை 10 மொழிகளில் ரிலீஸ் செய்யப் போகிறார்கள். அந்த படத்தில் 5 கதாபாத்திரங்களில் வருகிறாராம் சூர்யா. படப்பிடிப்பு சத்தமில்லாமல் நடந்து வந்தாலும் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தி ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப் போகிறார்களாம்.
இந்த படம் ரிலீஸாவதற்கு முன்பே ரூ. 500 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல், சாட்டிலைட், இசை, தியேட்டர் உரிமைகள் எல்லாம் ரூ. 500 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் தெரிகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா, சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கராவுடன் இணையும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சூரரைப் போற்று திரைப்படத்தைப் போலவே இந்தப் படத்திலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சுதா கொங்கரா படத்தை எடுக்கப் போவதாக தகவல் எழுந்த நிலையில், தற்போது புதிய செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படத்தை எடுக்க சுதா கொங்கரா திட்டமிட்டுள்ளாராம். இந்தப் படத்திற்கான திரைக்கதையை இயக்குனர் நலன் குமாரசாமி எழுத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் திரைப்படங்களை இயக்கிய நாயகன் குமாரசாமி அடுத்ததாக நடிகர் கார்த்தி உடன் இணையுள்ளார். இந்த சூழலில் அவர் சூர்யா படத்திற்கும் திரைக்கதை எழுத உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சிறுத்தை சிவா உடனான படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் உடன் இணைய உள்ளார். இதன்பிறகு சுதா கொங்கரா இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.