இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கப்போகிறார் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் அஜித் – விக்னேஷ் சிவன் இணையும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த கூட்டணி இறுதியில் உடைந்தது. ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில் திடீரென விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டனர்.
விக்னேஷ் சிவன் சொன்ன பைனல் ஸ்கிரிப்ட் அஜித்துக்கு திருப்தி அளிக்காததால், அவரை அப்படத்தில் இருந்து நீக்கிய லைகா நிறுவனம் அவருக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தது. தற்போது அவர் ஏகே 62 படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை படுஜோராக செய்து வருகிறார். இப்படம் குறித்த அறிவிப்பும் இன்னும் ஓரிரு நாளில் ரிலீஸாக உள்ளது. ஷூட்டிங்கையும் விரைவில் தொடங்க உள்ளார்களாம்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டிராப் செய்யப்பட்ட எல்.ஐ.சி. என்கிற படத்தை தற்போது இயக்க விக்னேஷ் சிவன் தயாராகி வருகிறார். சிவகார்த்திகேயனுக்காக இந்த கதையை உருவாக்கிய நிலையில் தற்போது இந்தப் படத்தில் லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல் ஐ சி படத்திற்கான முதற்கட்ட வேளையில் இறங்கியுள்ள விக்னேஷ் சிவன், படத்தின் நாயகியாக பிரியங்கா மோகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. தொடர்ந்து நான்காவது முறையாக விக்னேஷ் சிவன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கணவரின் படத்தில் நடிக்க அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்து தகவலால் உற்சாகமம் அமைந்துள்ள நயன்தாரா ரசிகர்கள் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்த்து உள்ளனர்.
