நடிகை நயன்தாரா ஐயா படத்தில் துவங்கிய தன்னுடைய பயணத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் நயன்தாரா. தற்போது பாலிவுட்டிலும் ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நிலையில், தன்னுடைய கேரியர் பாதிக்காத வண்ணம் பார்த்து வருகிறார். இந்த ஜோடி வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக மாறியது. இந்த விஷயம் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், முன்னதாகவே தாங்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக் கொண்டதாக விளக்கம் அளித்த நிலையில், அந்த விஷயமும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
தற்போது ஷாருக்கானின் ஜவான், ஜெயம் ரவியின் இறைவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார். படத்தை இயக்குநர் அட்லீ இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய 75வது படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தப் படத்தை சார்ப்பட்டா 2 படத்தை தயாரிக்கவுள்ள நாத் எஸ் ஸ்டூடியோஸ் நயன்தாரா படத்தையும் தயாரித்து வருகிறது.
மேலும் ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்களும் இந்தப் படத்தை இணைந்து தயாரித்து வருகின்றனர். படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு எளிமையாக போடப்பட்டு தற்போது விறுவிறுப்பான சூட்டிங் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பெயரை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த ஜோடி முன்னதாக அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்திலும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவாக நிறைவு செய்து, இந்த ஆண்டின் இறுதியிலேயே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
