கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிப்பில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டது. அதில் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது அமோக ஆதரவை தந்தனர். இதனால் படம் 500 கோடி ரூபாய்வரை வசூலித்தது.
முதல் பாகம் பெற்ற பிரமாண்ட வெற்றியை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் மீதும் ரசிகர்கள் தங்களது கவனத்தை குவித்துள்ளனர். இதனால் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றன படக்குழுவும், தயாரிப்பு நிறுவனமும். அதுமட்டுமின்றி முதல் பாகத்தில் இருந்த சிறு சிறு குறைகள் நிச்சயம் இதில் களையப்படும் எனவும் கருதப்படுகிறது.
பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் இன்று வெளியிட்டது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் விழா வரும் 29ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் படக்குழுவினர் தவிர சிறப்பு விருந்தினராக யார் கலந்துகொள்வார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் கமல் ஹாசன் பொன்னியின் செல்வன் 2 ஆடியோ மற்றும் ட்ரெய்லர வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொன்னியின் செல்வன் 1 இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினியும், கமலும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
