கடந்த 2019ம் ஆண்டில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானது கோமாளி படம். இந்தப் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தின் மூலம் தன்னை வெற்றிப்பட இயக்குநர்கள் வரிசையில் நிலை நிறுத்திக் கொண்டார்.
இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார். ரொமாண்டிக் காமெடி படமாக வெளியான இந்தப் படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். பாய் நெக்ஸ்ட் டோர் லுக்கில் இந்தப் படத்தில் ரசிகர்களை கவர்ந்திருந்தார் பிரதீப் ரங்கநாதன்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தின் தமிழக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியிருந்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது. இதையடுத்து வெற்றிப்பட இயக்குநராக மட்டுமில்லாமல் வெற்றிப்பட நாயகனாகவும் மாறியுள்ளார் பிரதீப்.
இதனிடையே இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய அடுத்தப்படத்தில் நடிக்க பிரதீப்பை அணுகியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் லவ் டுடே படம் இந்தியிலும் ரீமேக்காக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபேன்தம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் பிரதீப்பின் அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இன்ஜினீயரிங் மாணவர்களை மையமாக வைத்து ஒரு ஸ்கிரிப்டை பிரதீப் உருவாக்கியுள்ளதாகவும் இந்தப் படத்திலும் அவரே இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.