தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக பல படங்களில் நடித்து வரும் நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு தனது காதலர் விக்னேஷ் சிவனை ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு சொகுசு ரெசார்ட்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு வாடகைத் தாய் மூலம் 2 ஆண் குழந்தைகளுக்கு அம்மாவாகி உள்ள நயன்தாரா தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வரும் நயன்தாரா கோலிவுட்டில் கைவசம் ஜெயம் ரவியின் இறைவன் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் அகமத் இயக்கத்தில் உருவாகி வரும் அந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் படத்தில் நயன்தாரா நடித்து அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
மேயாத மான் படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார். அமலா பாலை வைத்து ஆடை படத்தை இயக்கி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 15 நிமிடத்திற்கும் மேலான காட்சியில் அமலா பால் ஆடையே அணியாமல் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன் பிறகு சந்தானத்தை வைத்து சமீபத்தில் குலுகுலு படத்தை இயக்கி இருந்தார் ரத்னகுமார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ரத்னகுமார் தற்போது லியோ படத்திலும் தனது பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ரத்னகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள ஹாரர் படத்தில் நயன்தாரா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரத்னகுமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள படத்திற்கு நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்த உடனே இந்த படத்தை ஏப்ரல் இறுதியில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ருத்ரன், சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2 என படு பிசியாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நயன்தாராவுடன் இணைந்து நடித்தால் வேறலெவலில் இருக்கும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
