ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், சமுத்திரக்கனி, ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்திருந்த ஆர்ஆர்ஆர் படம் ராஜமௌலியின் வழக்கமான பாணியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. விமர்சன ரீதியாக படத்தின் மேல் சில முரண்கள் ரசிகர்களுக்கு இருந்தாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது.
படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. இந்திய சினிமாவில் மிகச்சிறப்பாக நடனம் ஆடும் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் தங்களது கால்கள் உடையும் அளவுக்கு அந்தப் பாடலில் நடனம் ஆடியிருப்பார்கள்.
நாட்டு நாட்டு பாடலானது முதலில் கோல்டன் குளோப் விருதை வென்றது. அதனைத் தொடர்ந்து சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கரில் நாமினேஷன் ஆனது. சில வாரங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடல் விருது வென்றது. இதனை இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலை எழுதிய சந்திரபோஸும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ராம் கோபால் வர்மாதான் எனது முதல் ஆஸ்கர். எனது ஆடியோ கேசட்டுகளை பலர் குப்பைத்தொட்டியில் வீசினார்கள். ஆனால் அவர் க்ஷானா க்ஷனம் படத்தில் எனக்கு பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார்.
ராம் கோபால் வர்மா இயக்கிய முதல் படமான சிவா மெகா ஹிட்டானது. அப்படி மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் கீரவாணியுடன் பணியாற்றுகிறாரே. எனவே ஏதோ ஒன்று கீரவாணியிடம் இருக்கிறது என்று நினைத்து என்னை பலரும் புக் செய்தார்கள். அதனால்தான் ராம் கோபால் வர்மா எனது முதல் ஆஸ்கர்” என்றார்.
இதற்கு பதிலளித்த ராம் கோபால் வர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில், “கீரவாணி. இறந்தவர்களைத்தான் இப்படி புகழ்வார்கள். எனவே நான் இறந்துவிட்டதாக உணர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இவரது ட்வீட்டை பார்த்த பலரும், என்னங்க இது பயங்கரமாக புகழ்ந்தவரையே ராம் கோபால் வர்மா இப்படி பங்கம் செய்கிறாரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.
