தமிழில் டாப் ஹீரோக்களான ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு ஹீரோ படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் சந்தோஷ் நாராயணன். இப்போது தமிழில் பிரஷாந்த் நடிப்பில் உருவாகும் ‘அந்தகன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘ஜிகர்தண்டா 2’ மற்றும் இரண்டு தெலுங்கு படத்திற்கு இசையமைக்கிறார்.
இதனிடையே அஜித்தின் 62வது படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அதில் உண்மை இல்லை எனவும் திரை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் அவர் தெலுங்கில் உருவாகும் ப்ராஜெக்ட் கே படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு, நாக் அஸ்வின் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘மகா நடி’.
இந்தத் திரைப்படத்தில் சாவித்திரியாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றிருந்தார். அதேபோல் தெலுங்கு மொழியில் சிறந்தப் படம் என்ற தேசிய விருதையும் இந்தப் படம் பெற்றிருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ‘ப்ராஜெக்ட் கே’ என்ற அறிவியல் புனைவுப் படத்தை மிகப் பிரம்மாண்டாக இயக்கி வருகிறார் இயக்குநர் நாக் அஸ்வின். இந்தப் படத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், சங்ராந்தி (பொங்கல்) பண்டிகையை முன்னிட்டு 2024-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி படம் வெளியாவதாக படக்குழு புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது, சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.
