நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமே தன்னுடைய எல்லைகளை குறுக்கிக் கொள்ளாமல், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது புதிய முயற்சியாக தெலுங்கிலும் சார் படத்தின் மூலம் அவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவரது அடுத்தடுத்த படங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து ரிலீசான வண்ணம் உள்ளது.தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் அதிகமான ரசிகர்களை கோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் வைத்துள்ளார் தனுஷ்.
அதனால்தான் இவரால் தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து நடிக்க முடிகிறது. இவரது நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான மாறன், திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக நித்யா மேனனுடன் ஜோடி சேர்ந்து தனுஷ் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் சிறப்பான வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து வாத்தி திரைப்படத்தையடுத்து, கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை வரும் மார்ச் மாதத்தில் நிறைவு செய்யவுள்ள தனுஷ், அடுத்ததாக தன்னுடைய டி50 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தை தனுஷ் இயக்கி நடிக்கவுள்ள நிலையில், ஒரு மாத காலம் இந்தப் படத்தின் முன் தயாரிப்பிற்காக நேரம் ஒதுக்கும் தனுஷ், மே மாதத்தில் படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தில் விஷ்ணு விஷால், எஸ்ஜே சூர்யா முக்கியமான கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் குறித்து அவரது அண்ணன் செல்வராகவன் அளித்துள்ள பேட்டியில் பேட்டியில், தனுஷ் இயக்கும் புதிய படத்தின் முழு கதையும் எனக்கு தெரியும். அது ஒரு சிறந்த கதை. கண்டிப்பாக இந்த படம் முழு வெற்றி பெறும். அத்துடன் இந்த படத்தில் நானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அப்படி அவர் வாய்ப்பு கொடுத்தால் அதில் சிறப்பாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனக் கூறியுள்ளார் செல்வராகவன்.
தனது தம்பியை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை மயக்கம் என்ன ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில், தற்போது தம்பியின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என அவரே கூறி இருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.