தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இசையமைப்பாளராக இருந்து வருபவர் யுவன் சங்கர் ராஜா. 25 ஆண்டு காலமாக தமிழ் திரை உலகில் பயணித்து இலட்சக்கணக்கில் ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கிறார். திரைப்படங்களில் இசையமைப்பது மட்டுமல்லாது, தனி இசை கலைஞர்களுக்கும் இசையமைத்து அவர்களுக்கு நம்பிக்கை அளித்துவருகிறார்.
தனது படத்திற்காக தமிழக அரசு விருது, பிலிம் பேர் விருதுகள் என எண்ணற்ற விருதுகளை வாங்கி இருக்கும் இவருக்கு இன்றளவும் மார்க்கெட் குறையவில்லை.
அவ்வப்போது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி பின்னனி பாடகர்களை வரவழைத்து பாடவைப்பது, அவர்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதுமாக இருந்து வருகிறார். இவரது இசை நிகழ்ச்சியை காண்பதற்கு ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர். இவரது இசை கான்செர்ட் நடக்கிறது என்றால் அதற்கு டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். டிக்கெட் விற்பனை துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் மொத்தமாக விற்று தீர்ந்து விடுகிறது.
இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று மாலை கோவையில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரியில் நடைபெற்றது. முன்னதாகவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் இந்த நிகழ்ச்சியை காண முதலில் வரும் ஆயிரம் பேருக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என பதிவிட்டிருந்தார் யுவன்.
இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு வந்திருக்கின்றனர். ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ஆளுக்கு ஆளுக்கு முந்திக்கொண்டு ஓடியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கிருந்து சுவர் இடிந்து விழுந்து ஒரு பெண் போலீஸ் மற்றும் சில மாணவர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். பிறகு போலீச படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜாவும் இந்த விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்பதால் கூடுதல் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.